ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஐ-போன் 17 மாடலை மும்பை, டெல்லி, புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் முதல் நாள் இரவில் இருந்தே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். ஐபோன்களை இந்தியர்கள் இவ்வளவு ஆர்வமாக உற்சாகமாக வாங்குவதற்கு என்ன காரணம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகச் சீனா இருந்து வருகிறது. உலக அளவில் விற்கப்படும் மொத்த ஐபோன்களில் 80 சதவீதம் சீனாவில் உற்பத்தியாகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் மொத்த ஐபோன் உற்பத்தியில் 14 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு, இந்த ஆண்டு 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, டிசம்பர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அமெரிக்காவில் விற்பனையான ஐபோன்களில் 90 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். இது கடந்த மார்ச் மாதமே 97.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2025 மார்ச் மாத தரவுகள் படி, கடந்த 12 மாதங்களில் சுமார் 22 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை விடவும் 60 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பெகட்ரான் நிறுவனங்களிலும் நடக்கிறது. நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தி அளவை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு, கர்நாடக மாநிலத்தில் தேவனஹள்ளியில் தனது புதிய ஐபோன் உற்பத்தி ஆலையை ஃபாக்ஸ்கான் தொடங்கியது. 25,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இது, சீனாவுக்கு வெளியே இந்நிறுவனம் தொடங்கியுள்ள பெரிய உற்பத்தி ஆலை என்று கூறப்படுகிறது.
முதல்முறையாக, ஆப்பிளின் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்கள் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்டுள்ளன. ஐபோன் 17 ப்ரோ, ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நடத்தும் பெகாட்ரான் ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஐபோன் 17 டாடாவின் விஸ்ட்ரான் உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் ஏர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன்களில் பெரும்பகுதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அமெரிக்காவில் விற்கப்பட்ட ஐபோன்களில் பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து தயாரிக்கப் பட்டவை என்று ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆப்பிள் ஐபோன்களைப் பொறுத்தவரை, நுகர்வோர் சந்தையாக மட்டுமல்லாமல், முக்கிய ஏற்றுமதி தளமாகவும் இந்தியா வளர்ந்து வருகிறது. ஏற்கனவே, ஐபோன் 14, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 உள்ளிட்ட முந்தைய ஐபோன் மாடல்களும் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டன.
முந்தைய ஐபோன் மாடல்களை விட புதிய ஐபோன் 17 மாடல்களின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு ஆப்பிள் போனிலும் இல்லாத வகையில் மிகக் குறைந்த 5.6 மில்லிமீட்டர் தடிமனில் இந்தப் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஐபோன் 17-ன் ஆரம்ப விலை 82,000 ரூபாயாகவும், ஐபோன் 17 ப்ரோவின் ஆரம்ப விலை 1,34,900 ரூபாயாகவும், ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆரம்ப விலை 1,49,900 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐபோன் 17 ஏர் மெல்லிய புதிய மாடலின் ஆரம்ப விலை 1,19,900 ரூபாயாகும்.
முழுவதும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் என்பதால், இந்தியாவில் ஐபோன் 17 க்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே உள்நாட்டு விற்பனையிலும் ஐபோன் 17 புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.