பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் அதன் துணை அமைப்பான மஜீத் படைப்பிரிவை ஐநாவில் தடைச் செய்வதற்கான பாகிஸ்தானின் முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானை தனி நாடாகப் பிரித்து தரக்கோரி பிஎல்ஏ எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடுகிறது.
அந்த அமைப்பை பாகிஸ்தானால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை இந்தியா தான் பின்னால் இருந்து இயக்குகிறது எனவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. அண்மையில் நடந்த இந்தியா, பாகிஸ்தான் போருக்குப் பிறகு பல வகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவி வந்தது.
அதன் ஒரு பகுதியாகப் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவும் அறிவித்தது. தற்போது இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் வலுப்பெற்று வருகிறது.
இந்தச் சூழலில் ஐநா சபைப் பாதுகாப்பு கவுன்சிலில், பிஎல்ஏ மற்றும் மஜீத் படைப்பிரிவு ஆகிய அமைப்புகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டுவந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரமில்லை எனக் கூறி, அமெரிக்காவுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அதன்
தீர்மானத்துக்குத் தடை விதித்துள்ளன.