சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ‘ரிங் மெயின் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் உருவாகிறது.
சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக 5 ஏரிகள் மற்றும் 2 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், 7 நீராதாரங்களை இணைக்கும் வகையில் ‘ரிங் மெயின் திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் உருவாகி வருகிறது.
இந்தியாவிலே முதன்முறையாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புப் பிரிவு மேற்பார்வை பொறியாளர் தலைமையிலான குழுவினர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் மின் இரைப்பான்கள் மற்றும் வால்வுகளை ஒரே இடத்தில் இருந்து இயக்கும் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.
ஒரு திட்டத்தில் தண்ணீர் கொடுக்க முடியாத சூழலில், மற்றொரு திட்டத்தின் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்றும், இதனால் எந்தப் பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது எனவும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடிநீர் குழாய்கள், வால்வுகளில் ஏற்படும் பழுது உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் அமர்ந்து கண்காணித்துச் சரிசெய்ய முடியும் என்றும் கூறியுள்ளனர்.