மதுரையில் ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் – மரிய ஜெனிபர் தம்பதியின் மகள், அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு வழக்கம்போல் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த நாயொன்று அவரை கடித்ததில் மாணவி படுகாயமடைந்தார். தொடர்ந்து மீட்கப்பட்ட அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதே போல, நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி – காளீஸ்வரி தம்பதியின் 8 வயது மகனையும் தெருநாய் ஒன்று துரத்தி துரத்திக் கடித்தது.
இதில் படுகாயமடைந்த சிறுவனும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒரே நாளில் இரு மாணவர்களை தெருநாய் கடித்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.