புதுக்கோட்டையில் நடந்த குப்பை சேகரிப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில், ஆட்சியர் அலுவலகத்தின் முக்கிய ஆவணங்களை ஊழியர்கள் குப்பையில் போட்டதால், மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சியடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துாய்மை இயக்கம் 2.0 திட்டத்தில் குப்பை சேகரிக்கும் முறை குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
இதனை தொடர்ந்து, குப்பைகளை சேகரித்து அழிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்காக, ஆட்சியர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத ஜெராக்ஸ் மிஷின், கீ போர்டு, ஜெராக்ஸ் பேப்பர்கள் உள்ளிட்ட பழைய பொருட்கள் கொண்டு வரப்பட்டன.
அவற்றை, ஆட்சியர் அருணா ஆய்வு செய்தபோது, அதில் துறை ரீதியான ஆவணங்கள் மற்றும் இரண்டு ஆண்டுக்கு முந்தைய அரசு ஆவணங்களின் நகல்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து, அலுவலர்களை கண்டித்த ஆட்சியர், பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களை முறையாகக் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஆவணங்களை மீண்டும் அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.