புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூரில் உள்ள
கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசையின்போது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள், தெப்பக்குளத்தில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அப்போது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி அவர்கள் வழிபட்டனர். இந்த வழிபாட்டால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதி கிடைக்க முன்னோர்களின் ஆன்மா உதவும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மகாளய அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் மகாளய அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மகாளய அமாவாசையையொட்டி சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும், கோயில் மலைப் பகுதியில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.