திருப்பூரில் கல்குவாரி பாறைக் குழியில், குப்பைகள் கொட்டுவதை நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
திருப்பூரில் தினமும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்பாடற்ற கல்குவாரி பாறைக்குழியில் மாநகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகக் கூறி முதலிபாளையம், சிட்கோ, நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்ட கூடாது என்றும், திடக்கழிவு மேலாண்மை மூலம் நிரந்தரத் தீர்வு அளிக்கக் கோரியும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.