பாடகர் ஜூபின் கர்க்கின் மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த குரல், மவுனமாகியதை நினைத்து ரசிகர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். மெல்லிய குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட ஜூபின் கர்க் குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்….
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகரான ஜூபின் கர்க், எப்பேர்பட்ட கல் நெஞ்சுகாரர்களையும் நொடிப்பொழுதில் இளகச் செய்யும் காந்த குரலுக்குச் சொந்தக்காரர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் 38 ஆயிரத்துக்கும் பாடல்களைப் பாடி, இசை உலகில் தனக்கெனத் தனி சாம்ராஜ்ஜியம் அமைத்தவர்.
இதுமட்டுமல்ல, வடகிழக்கு மாநிலங்கள் உரிய கவனம் பெறாத காலத்திலேயே, அதன் கலாச்சாரத்தையும் பெருமையையும் தனது புகழ் வெளிச்சம் மூலம் உலகளவில் கொண்டு சேர்த்தவர்.
ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருந்த ஜூபின் கர்க்கிற்கு, 2006-ம் ஆண்டில் வெளியான கேங்ஸ்டர்த் திரைப்படம், அவரது இசைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது . படம் கலவையான விமர்சனத்தைப் பெற்ற போதும், பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தன.
குறிப்பாக, ஜூபின் கர்ப் பாடிய ‘யா அலி’ பாடல் ஒலிக்காத இடமே இல்லை. படம் தோல்வியடைந்துவிடும் என விமர்சர்கள் கூறியபோதும், ‘யா அலி’ பாடல் அதனைத் தவிடுபொடியாக்கியது. ஜூபின் கர்க் குரலால் கேங்ஸ்ட்ர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் கரைசேர்ந்து விட, அதன்பிறகு ஜூபின் கர்க்கிற்கு எல்லா மொழிகளிலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
ஜூபின் கர்க்கைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக ரசிகர்கள் கருதி வர, அவர் ஸ்கூபா டைவிங் விபத்தில் உயிரிழந்தது ஒவ்வொருவரின் இதயத்திலும் பேரிடியாக விழுந்தது.
சிங்கப்பூரில் நடந்த ‘வடகிழக்கு விழா’வுக்காக இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்த ஜூபின் கர்க், பல்வேறு சாகச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
ஆழ்கடலில் நடத்தப்படும் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்ட போது ஜூபின் கார்க்குக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும், ஜூபின் கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இசை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அசாம் மக்களும் மனமுடைந்தனர்.
ஜூபின் கர்க்கின் உடலை சிங்கப்பூரில் இருந்து தாயகம் கொண்டு வருவதற்கு முன்னரே கௌகாத்தியில் உள்ள இல்லத்தில் குவியத் தொடங்கிய ரசிகர்கள், சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து ஜூபின் கர்க் இல்லத்திற்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டபோது, சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறங்களிலும் குவிந்திருந்த மக்கள், மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.
ஜூபின் கர்க்கிற்கு மிகவும் விருப்பமான ஜீப்பில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது, அதனை பின்தொடர்ந்த ரசிகர்கள், நா தழுதழுக்க பாடல்களைப் பாடினர். ஜூபின் கர்க் எவ்வளவு மனங்களைச் சம்பாதித்துள்ளார் என்பது ஒவ்வொருவரின் கண்களிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன.
தாங்கள் நேசித்த ஒருவர் இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டாரே என்பதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் துடிதுடித்தனர். இதனிடையே ,ஸ்கூபா டைவிங் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அசாம் போலீஸார், நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஷியாம் கனு மஹந்தா, ஜுபின் கர்க்கின் மேலாளர்ச் சித்தார்த்த சர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜூபின் கர்க் மறைவை ஒட்டி அசாம் மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கவுகாத்தியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஜூபின் கர்க் தனது 52 வயதிலேயே உலகைவிட்டு மறைந்து விட்டாலும், அவரது பாடல்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.