மோடியின் தொழில் மகள் விழா என்ற பெயரில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி கோவையில் உதவி கிடைக்காத ஆயிரத்து 500 பெண்களை பாஜகவினர் தொழில் முனைவோராக்கியுள்ளனர். அது பற்றிய செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்த நாளை நாடு முழுவதும் பலரும் கோலாகலமாகக் கொண்டாடினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்குப் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளையும் செய்தனர்.
அந்த வகையில் கோவை மாநகரப் பாஜகவினரும் பிரதமர் மோடியின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட பாஜகவினர் ஆயிரத்து 500 பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதன்படி உதவி கிடைக்காத ஆயிரத்து 500 பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அதில் தேவைப்படுவோருக்குத் தொழில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்குத் தொழில் புரிவதற்கான உபகரணங்கள் வழங்கும் விழா மோடியின் தொழில் மகள் விழா என்ற பெயரில் கோவைக் கணபதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது.
பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜகத் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு நிகழ்ச்சியில் தொழில் புரிவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட இந்த உதவி தங்கள் வாழ்வை மாற்றி அமைப்பதாகப் பயனாளிகள் தெரிவித்தனர். சொந்தக் காலில் நிற்க, வழிவகைச் செய்து கொடுத்த பாஜகவினருக்கு அவர்கள் நன்றித் தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளியான தனது மகள் தையல் தொழில் தெரிந்தும் உதவி கிடைக்காமல் தவித்ததாகப் பயனாளியின் தாயார் ஒருவர் தெரிவித்தார். தன்னம்பிக்கையுடன் இருந்த தனது மகளுக்குப் பாஜகவினர் செய்த உதவி உத்வேகமாக இருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் பிரதமர் மோடிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் நன்றித் தெரிவித்தனர். மேலும் இந்த நாள் தங்களின் வாழ்வை மாற்றியமைக்கும் நாளெனப் பயனாளிகளுடன் வந்த குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் உதவிக்காகக் காத்திருந்த பெண்களைத் தொழில் முனைவோராக்கிய பாஜகவினரின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.