இந்தியா – மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டிற்கு சென்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மொராக்கோ நாட்டிற்கு அரசு முறை பணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் ரபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மொராக்கோவில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் ஒருநாள் இந்தியாவுடன் இணையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையடுத்து மொராக்கோவில் மறைந்த மன்னர் 2ஆம் ஹாசன் நினைவிடத்திற்கு சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மொராக்கோ பாதுகாப்புத்துறை அமைச்சர் அப்தல்டிப் லவ்டியி மற்றும் ராஜ்நாத் சிங் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் இந்தியா, மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.