உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு அம்மாநில தலைமை செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதி பாகுபாடுகளை களைய வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் சாதி பெயர்கள், வாசகங்கள் அல்லது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால், 1988 மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்க வேண்டும் என்றும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொடர்புடைய வழக்குகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறை பதிவேடுகளில் சாதி தொடர்புடைய குறிப்புகளை பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொது அமைதி மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.