பாகிஸ்தான் விமானப்படைச் சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்…
ஒவ்வொரு முறையும் இந்தியா மீது துல்லிய தாக்குதல் நடத்திவிட்டதாகப் பொய்களை பரப்பும் பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்குப் பதிலாக அப்பாவி மக்களைக் கொன்று குவித்துக் கையும் களவுமாக மாட்டியுள்ளது.
உலகின் மிக ஆபத்தான இடமாகக் கருதப்படும் கைபர்ப் பதுன்குவா மாகாணத்தில், தெஹ்ரிக் – இ – தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. பாகிஸ்தான் தலிபான்கள் என்ற பெயரில் இயங்கும் அவர்கள், நடப்பாண்டில் மட்டும் 605 தீவிரவாத தாக்குதல்களை நடத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 139 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 79 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி, பாகிஸ்தான் ராணுவத்திற்கும், டிடிபி தீவிரவாதிகளுக்கும் காலம் காலமாக மோதல் நீடிக்க, அண்மைக் காலமாக அது மேலும் வலுத்துள்ளது. 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தெஹ்ரிக் – இ – தலிபான் உடனான போர் நிறுத்தம் முறிந்ததில் இருந்து அங்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு, டிடிபி தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்தச் சூழலில் தான் கைபர் பதுன்குவா மாகாணத்தில் தெஹ்ரிக் – இ – தலிபான் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள திரா பள்ளத்தாக்கில் தொடர்ச்சியான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் கூட பாகிஸ்தான் ஈடுபடுமா? என்ற ஆச்சரியம் எழ, சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுவீசி, பாகிஸ்தான் விமானப்படை அதற்கு முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.
திரா பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் தெஹ்ரிக் – இ – தலிபான்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த பொய்யான தகவலை நம்பி, LS-6 ரகக் குண்டுகள் வீசிய பாகிஸ்தான் விமானப்படை, 30 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாகி இருக்கிறது. ஏராளமானோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பெண்களும், குழந்தைகளும் பாகிஸ்தான் விமானப்படையின் பொறுப்பற்ற செயலுக்குப் பலியாகிவிட, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு இரண்டு மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலால், தூக்கத்திலேயே அப்பாவி மக்கள் உயிரைத் துறக்க, பாதிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
ஒவ்வொரு முறையும் இந்தியாவை சீண்டி பார்த்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் பாகிஸ்தான் ராணுவம், சட்டை மேல் மண் ஒட்டாத கதையாகப் பொய் செய்திகளைப் பரப்பியே காலத்தை ஓட்டி வரும் நிலையில், தற்போது சொந்த நாட்டு மக்களின் மீதே தாக்குதல் நடத்தி அவர்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது.