நெல்லை மாவட்டம், வள்ளியூர் சந்தை அருகே கருணாநிதி சிலையை நிறுவுவதற்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வள்ளியூர் காய்கறி சந்தையின் நுழைவாயிலுக்கு அருகில் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகையை நிறுவ நிதி ஒதுக்கப்பட்டுத் தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிலை நிறுவ அனுமதி மறுத்து, பொது இடங்களில் இடையூறாக உள்ள சிலைகளை அகற்றவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது இடத்தில் இடையூறாக இருக்கும் எனக் கருதித்தான் சிலை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளதால், உத்தரவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மனுவைத் திரும்ப பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும், சிலை நிறுவ அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.