சென்னை பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம் 21-வது ஆண்டாகச் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
பாரிமுனைத் தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் உடுப்பு ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஆசியுரை வழங்கிக் கொடியை அசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 11 வெண்பட்டு திருக்குடைகள் அணிவகுத்துத் திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோபால்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருக்குடைகள் ஊர்வலத்தை வழிநெடுகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்தி முழக்கமிட்டனர்.
இதனால் என்.எஸ்.சி.போஸ் சாலை, மிண்ட் சாலை மற்றும் அதனைச் சூழ்ந்த இணைப்பு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.