முதன்முறையாக வெளிநாட்டில் இந்தியா தனது ராணுவ உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது. அதுவும் ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் மிகப்பெரிய பாதுகாப்பு உற்பத்தி ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார். இது, நாட்டின் ராணுவத் துறையில் வளர்ந்து வரும் உலகளாவிய விரிவாக்கத்தை பிரதிபலிக்கும் முக்கிய மைல்கல்லாகும். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நாடு மொரோக்கா. கிழக்கு எல்லையாக அல்ஜீரியா, தெற்கு எல்லையாகச் சஹாரா, மேற்கு எல்லையாக அட்லாண்டிக் பெருங்கடலும், வடக்கு எல்லையாக மத்தியதரைக் கடலும் உள்ளன. இங்குள்ள ஜிப்ரால்டர் ஜலசந்தி ஸ்பெயினிலிருந்து இந்நாட்டை பிரிக்கின்றன. இன்னொரு வகையில் சொன்னால், மொரோக்கோவிலிருந்து கடலில் ஒரு சில கிலோமீட்டர் சென்றாலே ஸ்பெயின் வந்து விடும். இங்கிருந்து, ஐரோப்பாவின் நுழைவாயிலாக ஸ்பெயின் உள்ளது.
இதனாலேயே புவியியல் அமைப்பு ரீதியாக மொரோக்கோ அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது, கடந்த 2015-ல் பிரதமர் மோடியைச் சந்தித்ததிலிருந்து இந்திய-மொராக்கோ இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் படிப்படியாக முன்னேறியுள்ளன. இதன் ஒருபகுதியாக, இந்தியாவின் டாடா குழுமத்துக்குச் சொந்தமான Tata Advanced Systems Ltd மொரோக்கோ நாட்டின் காசாபிளாங்கா பகுதியில் பாதுகாப்பு துறை உபகரணங்களைத் தயாரிக்கும் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் வெளிநாட்டில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஆலையை அமைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த உற்பத்தி ஆலையில் மொரோக்கோ ராணுவத்துக்குத் தேவையான Wheeled Armoured Platforms எனப்படும் போர் கவச வாகனங்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன. 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் சான்றாக விளங்குகிறது. அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாக இராணுவ வீரர்கள் பயணம் செய்வதற்கும், எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கி அழிப்பதற்கும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட போர் வாகனமாக இந்தக் கவச வாகனம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஓராண்டுக்கு 100 போர் வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டதாக இந்த ஆலை அமைக்கப் பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக மொராக்கோ நாட்டுக்குச் சென்றிருந்தார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மொராக்கா நாட்டுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவில் முதல் இந்திய பாதுகாப்பு உற்பத்தி ஆலையான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆலையைத் திறந்து வைத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புறவில் ஒரு வரலாற்று மைல்கல் என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கான மொராக்கோவின் ஆர்வத்தைப் பாராட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஆலையில் உற்பத்தியாகும் கவச வாகனங்கள், 35 சதவீத உள்ளூர் மூலப்பொருட்களுடன் தொடங்கி 50 சதவீதமாக உயரும் என்று கூறியுள்ளார். மொராக்கோவில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேம்பட்ட போர் வாகன உற்பத்தி ஆலையை மொராக்கோவில் திறந்ததன் மூலம், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு ஏற்றுமதி சந்தைகளில் இந்தியா எளிதாக நுழைந்திருக்கிறது. தொடர்ந்து, பாதுகாப்புத் தொழில், கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் வகையில் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கூடுதலாக, பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் பரிமாற்றங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்திட்டத்தை இருநாடுகளும் ஏற்படுத்தியுள்ளன. Make in India-வுடன், Make with Friends மற்றும் Make for the World என்ற பிரதமர் மோடியின் பரந்த குறிக்கோளின் வெற்றியாக மொராக்கோவில் இந்த இராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை கம்பீரமாக உள்ளது.
இந்த ஆலை இந்தியாவின் பொருளாதார வெற்றி மட்டுமல்ல. இந்த ஆலை இந்தியா உலகத்துக்குச் சொல்லும் புவிசார் அரசியல் செய்தியாகவும் உள்ளது. அந்தச் செய்தி இந்தியா பாதுகாப்புத் துறை உற்பத்தி மையமாக மட்டுமில்லாமல், உலகத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறது என்பது தான்.
















