சீமானும் விஜயலட்சுமியும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சீமான் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய சீமானின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீண்டும் நீதிபதிகள் நாகரத்தினா , ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை எனக் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துக் கொண்டு செல்வது? எனக் கேள்வி எழுப்பினர்.
ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த வழக்கு குறித்து இருவரும் ஊடகங்களில் பேட்டி கொடுக்கக் கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.