ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் பொதுமக்கள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முதல்வர் ஸ்டாலின் அவர்களே தாங்கள் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பல்வேறு பெயர்களில் விதிக்கப்பட்ட அதிக வரிகளால் மக்கள் மிகுதியாக அல்லலுற்றனர் என்பதை மறந்துவிட்டீர்களா என்ன? அதே போல் நமது பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு “ஒரே நாடு ஒரே வரி” எனும் தாரக மந்திரத்தோடு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்து மக்கள் மீதான நிதிச்சுமையை இலகுவாக்கியதோடு, தற்போது இரண்டடுக்கு ஜிஎஸ்டி வரிமூலம் மக்களுக்குத் தேவையான 350 அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களின் சேமிப்பு பெருகவும் வழிவகுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா என்ன? ஜிஎஸ்டி வரிக்குறைப்பினால் பொதுமக்கள், வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பலனடைவர்.
ஆனால் இதை எல்லாம் உற்று நோக்கவிடாது, அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் திமுக
அரசின் கண்களை மறைக்கிறது என்பதை அறிந்ததனால், தங்களின் கவனத்திற்கு 10 பொருட்களின் விலையை மட்டும் பட்டியலிட்டு ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.
இதற்குப் பின்னும் தேவையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகள் மூலம் மக்களைத் திசைதிருப்புவதை விட்டு மக்களுக்குப் பலனளிக்கும் மத்திய அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கையை ஓர் மக்கள் பிரதிநிதியாக வரவேற்று மகிழுங்கள்! அது தான் தாங்கள் வகிக்கும் பதவிக்கு அழகும் கூட என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.