காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில், கரூர் நகர காங்கிரஸ் மகளிரணி தலைவர் கவிதா திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலைநிமிர முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குத் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிவை நீக்கினார்.
இதனிடையே, செந்தில் பாலாஜி நீக்கிய பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கண்டன பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், அர்ஜென்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்றதால் செந்தில் பாலாஜியின் பதிவுக்கு உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும் என்றும், ஒரு முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியைப் பொதுவெளியில் அவமதிப்பதை எப்படி புரிந்து கொள்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எடுத்துச் செல்வார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.