லடாக்கில், மாநில அந்தஸ்து கேட்டு, Leh Apex Body சார்பில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. 4 பேர் உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறைக்குப் பின்னணி என்ன? இளைஞர்களை வன்முறைக்குத் தூண்டியதாக மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் யார் ? அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீனா மற்றும் பாகிஸ்தானின் எல்லையில் இமயமலை சாரலில் அமைந்துள்ள லடாக், மக்கள்தொகை அளவில் இந்தியாவின் மிகச்சிறிய பிரதேசங்களில் ஒன்றாகும். சுமார் 59 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட லடாக்கில் லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. லேவில் பௌத்த சமயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அதே நேரத்தில் கார்கிலில் பெரும்பான்மையாக ஷியா முஸ்லிம்கள் உள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வாழும் லடாக்கில் 97 சதவீதம் பேர் பழங்குடியினர். கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது அரசியல் அமைப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கேட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2023ம் ஆண்டு டிசம்பரில் Leh Apex Body மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணியுடன் லே உயர் அதிகாரக் குழு நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இதில், எந்த முடிவும் எட்டப்படாததால், இரு அமைப்புகளும் “லே சலோ” போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.
டெல்லியை நோக்கிய நடைப்பயணப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்திய அரசு, சோனம் வாங்சுக்-ஐ கைது செய்து கடந்த அக்டோபரில் விடுதலை செய்தது. ஒரு பொறியியலாளரான சோனம் வாங்சுக், 15C வெப்பநிலையைப் பராமரிக்கும் குறைந்த விலை மண் வீடு, விவசாயிகளுக்குத் தண்ணீர் தேவைக்கான கீழ்நிலை நீரை சேமிக்கும் பனி ஸ்தூபியின் வடிவத்தில் ஒரு செயற்கை நீரூற்று ஆகியவை இவரின் சில கண்டுபிடிப்புக்கள் ஆகும். ரமோன் மகசேசே விருது பெற்ற சோனம் வாங்சுக் கதாபாத்திரத்தில் தான், 2009ம் ஆண்டு, வெளியான பாலிவுட் திரைப்படமான 3 இடியட்ஸில் அமிர் கான் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியானதும் தேசிய அளவில் புகழ் பெற்றார்.
ஏற்கெனவே, இப்பகுதியின் பூர்வீக பழங்குடி கலாச்சாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தைச் சோனம் வாங்சுக் நடத்தினார். தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, LAB மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணி உடன் லடாக் தொடர்பான உயர்மட்ட அதிகாரக் குழு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, பேச்சுவார்த்தை நடத்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை ஏற்க மறுத்த சோனம் வாங்சுக், கடந்த 10 தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார். இதனையடுத்து, LAB அமைப்பின் இளைஞர் பிரிவு மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. லே அரசு நிர்வாகம், போராட்டத்துக்குத் தடையுத்தரவு பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை மீறி ஏராளமானோர் கடந்த புதன்கிழமை கண்டனப் பேரணி நடத்தினார்கள்.
பேரணியில் கலந்து கொண்டவர்களில் சிலர், லே பாஜக அலுவலகம் மற்றும் லே நிர்வாக அலுவலகம் மீது கற்களை வீசியும், வாகனங்கள் மற்றும் அலுவலகங்களுக்குத் தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது ஜென்-Z புரட்சி என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள் என்றும் சோனம் வாங்சுக் கூறியுள்ளார்.
ஆனால் லடாக்கில் வெடித்த வன்முறைக்கு, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லே உச்சநிலை அமைப்பு, காா்கில் ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுடன் மத்திய அரசுப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, இந்தப் பேச்சுவாா்த்தையின் பலனாக, லடாக் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 45 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு, போதி மற்றும் புா்கி மொழிகள் அலுவல் மொழிகளாக அறிவிப்பு, 1,800 அரசுப் பணியிடங்களுக்கான ஆள்தோ்வு போன்வற்றை மத்திய அரசுசெய்திருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் உயா் அதிகார குழு மூலம் ஏற்பட்ட முன்னேற்றங்களைச் சிலல அரசியல் உள்நோக்கம் கொண்ட நபா்கள் விரும்பவில்லை என்றும், அவா்கள் பேச்சுவாா்த்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
பல தலைவர்கள் கேட்டுக்கொண்டபோதும், வாங்சுக் தனதுபோராட்டத்தைக் கைவிட மறுத்தார் என்றும், நேபாள போராட்டம் உள்ளிட்ட சில போராட்டங்களைக் குறிப்பிட்டு, பொதுமக்களை அவர் தூண்டிவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சம் கூறயுள்ளது.
வன்முறை நடந்த அதே சமயத்தில் உண்ணாவிரதத்தை கைவிட்ட வாங்சுக் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர, அவர் எந்தவித தீவிரமான முயற்சியையும் எடுக்கவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அதே நேரத்தில் அரசியல் சாசன பாதுகாப்பை வழங்கி, லடாக் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக ஊடகம் மற்றும் சமூக ஊடகத்தில் வெளியான பழைய மற்றும் ஆத்திரமூட்டும் காணொலிகளை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.