பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ மற்றும் நாசா வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோள் ஜூலை மாதம் 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
தரையிலிருந்து புறப்பட்ட 19 நிமிட பயணத்துக்குப் பின்னர் 745 கி.மீ. உயரத்தில், திட்டமிட்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
மொத்தம் 2 ஆயிரத்து 392 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இதில் எல் பேண்ட் மற்றும் எஸ் பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்பு, பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள், பயிர்நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பத மாற்றங்கள், நிலத்தட்டுகள் நகர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற முடியும்.
அந்தவகையில் விஞ்ஞானிகள் கூறியபடியே, பூமியின் மேற்பரப்பில் நிலம், காடுகள், கடல் போன்றவற்றை நிசார் எடுத்த ரேடார் படங்களை இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து வெளியிட்டுள்ளது.