இந்திய வான்பரப்பை 63 ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மிக் 21 ரக போர் விமானங்களுக்கு ஓய்வு பெற்றது. நான்காம் தலைமுறை எஃப் 16 போர் விமானத்தை வீழ்த்திய பெருமைக்குரிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுத்தனர்.இதுபற்றிவிரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
இந்திய விமானப்படையில் 63 ஆண்டுகள் சேவையாற்றிய மிக் 21 ரக போர் விமானங்களுக்கு இன்று பிரியா விடை வழங்கப்பட்டது. இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வந்தன.
நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட போர் விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதை முன்னிட்டு, பழைய விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சண்டிகரில் மிக் 21 ரக போர்விமானங்களுக்குப் பிரியா விடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தளபதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது மிக் 21 ரக விமானங்கள் கடைசியாக ஒருமுறை வானில் பறந்ததை கண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், வீரர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மிக் 21 ரக விமானங்களுக்கு ஓய்வு அளிக்கும் காலம் இதுவல்ல என முன்னாள் விமானப்படை அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மிக் 21 ரக போர் விமானங்கள் பறக்கும் சவப்பெட்டி என்று கிண்டலாக அழைக்கப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அடிக்கடி மிக் 21 ரக விமானங்கள் விபத்தில் சிக்கிக்கொள்வதற்கு, விமான ஓட்டிகள் போதிய பயிற்சி பெறாததே காரணம் என்றும், விமானத்தின்தரத்தைக் குறைகூறுவது சரியாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். 1965, 1971, 1999 போர்களில் மிக் 21 விமானங்கள்எதிரிகளுக்குச் சிம்மம சொப்பமனமாக விளங்கியதை சுட்டிக்காட்டியுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள், 2019-ம் ஆண்டில் கூடப் பாகிஸ்தானின் எஃப் 16 விமானம், மிக் 21 ரக விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளனர்.
நான்காம் தலைமுறை எஃப் 16 போர் விமானத்தை, பழமையான விமானத்கை கொண்டு வீழ்த்த முடிகிறதென்றால், விமான ஓட்டிகளின் திறன் அதில் முக்கிய பங்காற்றுவதாக அவர்கள் உதாரணம் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க, ஜெர்மன் விமானப்படையில் சேவையாற்றிய எஃப் 104 ரக போர் விமானங்கள், 170 பைலட்டுகளின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. அந்த விமானம் பறக்கும் சவப்பெட்டி என்று அழைக்கப்படுகிறதென்றால், அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், மிக் 21 ரக விமானங்களை அவ்வாறு அழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என அவர்கள்திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
21-ம் நூற்றாண்டில் குறைந்த அளவிலேயே விபத்து ஏற்படுத்தியுள்ள, மிக் 21 ரக விமானம் இன்னும் சிறிது காலம் இந்திய விமானப்படையில் சேவையாற்றி இருக்கலாம் என்றே அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.