இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதன் காரணமாகவே கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் கனமழை வெளுத்து வாங்குவதாக வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..
மேற்கு வங்கத்தில் அண்மையில் பெய்த கனமழை காரணமாகக் கொல்கத்தா முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. 24 மணி நேரத்திற்குள் 254 மி.மீ. கனமழை கொட்டி தீர்க்கப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. அதிகாலையில் ஒரு மணி நேரத்திற்குள் 90 மி.மீ மழை பதிவாக, ஆங்காங்கே மின் கம்பங்கள் முறிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்தனர்.
சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்க, வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழலை எண்ணி, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் கண்ணீர் வடித்தனர். வெள்ளம் சூழ்ந்த இடங்களை விட்டு வெளியேற முடியாமல் பலரும் தவிக்க, அதிகாரிகளும் தன்னார்வலர்களும் அவர்களுக்கு ஆறுதலாகச் செயல்பட்டனர்.
இப்படி கொல்கத்தா மாநகரத்தையே புரட்டிப்போட்ட கனமழைக்கு, கால நிலை மாற்றத்தை வானிலை ஆய்வாளர்கள் காரணமாகக் கூறுகின்றனர். குறிப்பாக, இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால், இது போன்ற பேரிடர் ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சமீபத்திய ஆய்வின்படி, இந்திய பெருங்கடலின் வெப்பம் 1 புள்ளி 5 டிகரி செல்கியஸ் வரை உயர்ந்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட இது மிக அதிகம் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்..
தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்திய பெருங்கடலில் அதன் தாக்கம் எதிரொலிப்பது உலகிற்கே பேராபத்தாக அமையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். . இதே போன்றதொரு நிலை தொடர்ந்தால், அதி தீவிர புயல்கள் அடிக்கடி உருவாகி தொடர்ச்சியான இன்னல்களை மனித குலம் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். 21-ம் நூற்றாண்டின் இறுதியில், இந்திய பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பம் 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனக் கணித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், அப்படிப்பட்ட சூழல் உருவானால், அது எத்தகைய பேரழிவை ஏற்படும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையென அச்சம் தெரிவித்துள்ளனர். இது காலநிலை மாற்றத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை.
கடல் வளங்களைச் சீரழிப்பதுடன், அது சார்ந்த ஒட்டுமொத்த உயிரினங்களையும் அழித்து விடும் என்றும் கூறுகின்றனர். கொல்கத்தாவில் சம்பவம் இயற்கை நமக்கு விடுத்துள்ள சமிஞ்ஞை எனவும், இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால், அதன் தொடர்ச்சியான கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலையை பாதிக்காத வளர்ச்சி கட்டமைப்புகளை உருவாக்குவது மட்டுமே ஒரே தீர்வாக அமையும் என்றும் அவர்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.