ஆபரேஷன் சிந்தூர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் தவறான கருத்துகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதற்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்தது.
ஐக்கிய நாடுகள் அவையின் 80வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் குறித்து பேசியதோடு, இந்தியாவுடன் நடந்த மோதலில் வெற்றி பெற்றதாகவும் தவறான தகவலை பதிவு செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய தூதர் பெடல் கஜ்லோட், ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்த கருத்துக்களை நிராகரித்ததோடு, பாகிஸ்தான் பிரதமர் வழக்கம் போல பயங்கரவாதத்தை புகழ்ந்து பேசுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஷெபாஸ் ஷெரீப் எத்தகைய நாடகம் போட்டாலும் உண்மைகளை மறைக்க முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் படுகொலைக்கு காரணமான ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் ஆதரித்ததோடு, அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய பெடல் கஜ்லோட், கடந்த மே மாதம் 10ஆம் தேதி சண்டையை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் தங்களிடம் கெஞ்சியதாகவும், பாகிஸ்தானில் விமான தளங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.