தேசமறிந்த ஆன்மீக குருவும், சிறந்த சமூக செயற்பாட்டாளருமான மாதா அமிர்தானந்தமயி அவர்களின் 72-வது பிறந்த தினத்தையொட்டி, கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ள அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வளாகத்தில் நடைபெற்ற ‘அமிர்தவர்ஷம்-72’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் எண்ணற்ற மக்கள் பணிகளையும், ஆன்மீகச் சிந்தனைகளையும் தங்களது அறக்கட்டளைகள் மூலம் செயல்படுத்தி வருகிறார்கள்.
மேலும், மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக, தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் பொது இடங்களில் 6000-க்கும் மேற்பட்ட கழிப்பிடங்களை அமிர்தா அறக்கட்டளை அமைத்துக் கொடுக்கிறது.
சுனாமி மற்றும் கொரோனா போன்ற பேராபத்து காலங்களில், மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை செய்து கொடுப்பதில் அரசோடு துணை நின்ற அமிர்தா அறக்கட்டளையானது, மென்மேலும் தங்களது சமூகப் பணிகளை தொடர வேண்டுமென்பதற்கும், மாதா அமிர்தானந்தமயி அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மகிழ்வோடும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி நெடுங்காலம் வாழ்ந்திடவும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா,
மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.