கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற உள்ளதாக நீதிபதி தெரிவித்ததாக தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று தவெகவினர் முறையிட்டுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும், சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி முன்பு தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், தவெக வழக்கறிஞர் அறிவழகன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.நிர்மல் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரம் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி கூறியதாக தெரிவித்தார்.