கரூர் வேலுச்சாமிபுரத்தில், தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தின்போது நடந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. கூட்டநெரிசலில் பறிபோன உயிர்கள், உறவினர்களை சொல்ல முடியாத துயரத்தில் தள்ளியுள்ளது.
வரிசையாய் கிடத்தப்பட்ட உடல்கள், தந்தை, மகன், மனைவி என அன்புக்குரியவர்களை இழந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் உறவினர்கள் புழுவாய் துடிதுடித்துப் போன காட்சிகள், கரூரை பெருந்துயரில் தள்ளியிருக்கிறது. ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலிகள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்த, உடல் சோர்ந்து மயங்கிய நிலையில், குற்றுயிராய் கிடந்தவர்களைக் கண்டு கதறி அழுதனர் உறவினர்கள். விஜய்யை பார்த்தாலே போதும் என்ற எண்ணத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே காத்துக்கிடந்தனர் அப்பாவி பொதுமக்கள்.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தில் திணறியபடி கரூர் வேலுச்சாமிபுரத்தை மிகவும் தாமதமாக வந்தடைந்தது தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனம்… பிற்பகலில் பிரச்சார இடத்திற்கு வந்திருக்க வேண்டிய விஜய்யின் பிரசார வாகனம், மிகவும் தாமதமாக இரவு 7 மணியை கடந்தே வேலுச்சாமிபுரத்தை அடைந்தது.
ஏற்கனவே பல மணி நேரம் காத்திருந்து சோர்வடைந்த மக்கள், விஜய் வந்து பேசுவதை கண்ட தருணத்தில், திடீரென ஏற்பட்ட கூட்டநெரிசல், பலரையும் மூச்சுத் திணற வைத்தது… விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
அவர்களுக்கு உதவ ஆளில்லை, உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல வழியில்லை… இதனால் மூச்சைப் பிடித்து நிறுத்த முடியாத பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை அடுத்தடுத்து உயிரை விட்டது கரூரை கண்ணீரில் தத்தளிக்க வைத்தது…. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கடந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு நோக்கி விரைந்த ஆம்புலன்ஸ்கள், குற்றுயிராக கிடந்தவர்களை காப்பாற்ற முடியவில்லை.
குழந்தையை கையில் ஏந்தியபடி மருத்துவமனையில் அலறி துடித்த இளைஞரின் ஓலம் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது… ஐயோ, போச்சே என உறவுகளை தொலைத்து, கண்ணீர்விட்டு கதறி அழுத பெண்களின் மரண ஓலங்கள் கல்நெஞ்சையும் கரைய வைத்தன… மனதை நொறுக்கிவிட்டன.
சிதறிய ஓடிய கூட்டத்தில் உறவுகளை தொலைத்தவர்கள், அவர்களை பிணமாக கண்ட காட்சியும், அதன் வலியையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை… ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனையை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் சடலமாக வந்ததாகக் கூறுகிறது அரசு. இதன் மூலம் கூட்டநெரிசலில் அவர்கள் எவ்வாறு துடிதுடித்து இறந்திருக்கக்கூடும் என்பதை சிந்தித்துக் கூட பார்க்க முடியாது.
கூட்டநெரிசலில் அடுத்தடுத்து பறிபோன உயிர்களின் எண்ணிக்கை ஒவ்வொன்றாக உயர, இதய துடிப்பே நின்றுபோகும் அளவுக்கு சோகமே அங்கு வியாபித்திருந்தது. கூட்டநெரிசலில் 2 வயது மகன் குருவிஷ்ணுவை பறிகொடுத்து துடிதுடித்த தந்தையின் காட்சி மரணத்தைவிட கொடியது.
மருத்துவனையில் தனது மகனின் உடலை கையில் ஏந்தியபடி அவர் துடித்த காட்சிகள் கண்ணீரை வரவழைக்கின்றன… பிஞ்சு மகனின் உடலை பார்த்து தாயார் கதறி அழுத காட்சிகள் இதயத்தை நொறுக்கின.. ஒன்றே முக்கால் வயது மகனைப் பறிகொடுத்த காதுகேளாத, வாய் பேச முடியாத தாயார் செய்வதறியாது திகைத்து நின்றது, அழக்கூட முடியாமல் இடிந்துபோய் நின்ற காட்சியும் சோகத்தின் உச்சம்.
கரூர் தான்தோன்றி மலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஹேமலதாவும், அவரது 2 மகள்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானது அப்பகுதியையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் கூட்டத்தில் சிக்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாலை 5 மணி வரை பிரசார கூட்டத்தில் இருந்து வீடியோ காலில் பேசியவரை, பின்னர் பிணமாகவே பார்த்ததாகக் கூறுகிறார் அவரது மனைவி மல்லிகா.
அடுத்தமாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், கூட்டநெரிசலில் மகளையும், மருமகனையும் இழந்த தாய் கதறி அழுதது நெஞ்சை பிழிகிறது. போவாதீங்க, போவாதீங்கனு கெஞ்சியும் போனவங்க, பிணமாகத்தானே வந்தாங்க எனக் கண்ணீர் விட்டும் அழும் காட்சி அனைவரையும் உலுக்கியது… கரூர் கூட்டநெரிசலில் சிக்கி ஏமூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி உள்பட 5 பேர் உயிரிழந்தது கிராமத்தையே கண்ணீரில் மூழ்கச் செய்துள்ளது. கூட்டநெரிசலில் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் கணவரின் உடலை பார்த்து நிறைமாத கர்ப்பிணி கதறி அழுத சம்பவம் காட்சியை விவரிக்கவே முடியாது.
சிதறிக் கிடக்கும் காலணிகள், கரூர் பெருந்துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நிலையில், இதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியையும் பொதுமக்கள் முன்வைக்காமல் இல்லை… அதேநேரத்தில் தவெக கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்படுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சியும் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டிருக்கிறது. தவெக தலைவர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே 5 முறை காலணிகள் வீசப்பட்ட சம்பவம் வீடியோவில் தெள்ளத் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
5ஆவது முறை காலணி வீசப்பட்டதை தொடர்ந்தே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும், கூட்டத்தில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்தவர்களை நோக்கி விஜய் தண்ணீர் பாட்டில்களை வீசும் காட்சியும் வீடியோவில் பதிவாகி உள்ளது. கூட்டநெரிசலுக்கு அரசியல் தலைவர்கள் பலதரப்பட்ட கருத்துகளைக் கூறினாலும், பறிபோன அப்பாவி உயிர்களுக்கு யார் பதில் சொல்வது என்பதே பலதரப்பு மக்களின் கேள்வி. அரசு அமைத்த விசாரணை ஆணையம் உண்மையைக் கண்டறியுமா, ஒப்புக்காகச் செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.