கோவை மணியக்காரம் பாளையம் பகுதியில் சிதலமடைந்து காணப்படும் சாலைகளால் நேர விரயம் ஏற்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் கூட முறையாக வருவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மணியக்காரம் பாளையம் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சக்தி சாலையை இணைக்கும் பகுதியாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாகப் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்டுள்ள சாலைகள், இதுவரை முறையாக மூடப்படாமலும், செப்பனிடப்படாமலும் குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கிறது.
இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகத் தங்கள் பகுதிக்கு வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்துகள் கூடச் சேதமடைந்த சாலைகளைக் காரணம் காட்டி, ஊருக்குள் வராமல் பிரதான சாலையிலேயே நின்றுவிட்டு திரும்பிச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தோண்டப்பட்ட குழிகளைத் தரமான கட்டுமான பொருட்களைக்கொண்டு நிரப்பிச் சாலைகள் போடப்படாததாலும், அவசர கதியில் அவ்வப்போது சாலைகள் போடப்படுவதாலும், சில நாட்களில் அவை பூமிக்குள் புகுந்து பள்ளங்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறிப்பாகச் சாலை மார்க்கமாகப் பயணிக்கவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறும் குடியிருப்பு வாசிகள், சிதிலமடைந்த சாலைகளால் ஏற்படும் புழுதிக்கு நடுவே சிக்கி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். தவிர்க்கமுடியாமல் இந்தச் சாலைகளைப் பயன்படுத்துவதால் தங்கள் வாகனங்களின் பெரும்பாலான பாகங்கள் சேதமடைந்து விடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வாகங்களை நம்பி பிழைப்பு நடத்தும் மக்களுக்கு இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் சாலைகள் சிதிலமடைந்து கிடப்பதால், பல்வேறு சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் துயர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அண்மையில் காமராஜர் சாலை வழியாகத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பெண் காவல் ஆய்வாளர், இதே போன்ற சாலை பள்ளத்தால் ஏற்பட்ட விபத்தில் சிக்கியே தனது உயிரை இழந்தார் என்பதையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
மற்றொரு அசம்பாவிதம் நேர்வதற்குள் முறையாகச் சிதலமடைந்த சாலைகளைச் செப்பனிட்டு தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.