அந்தமான் தீவின் கடல் படுகையில் முதல்முறையாக இயற்கை எரிவாயுவின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் குறிப்பிடத்தக்க சாதனை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டின் எரிசக்தி தேவைக்கு, பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையை மாற்ற, அந்தமானில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடலில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது.
அதற்கு வலுசேர்க்கும் விதமாக அந்தமான் தீவுகளின் கடல் படுகையில், முதல்முறையாக இயற்கை எரியாவு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் எரிசக்தி துறையில் தன்னிறைவுக்கான மைல்கல்லாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அந்தமான் கடல் பகுதியில் அதிக இயற்கை எரிவாயு வளம் உள்ளது என்ற நீண்ட நாள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தமான் தீவுகளின் கிழக்கு கரையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீவிஜயபுரம்-2 என்ற இடத்தில் 295 மீட்டர் ஆழத்திலும், இரண்டாயிரத்து 250 மீட்டர் இலக்கு ஆழத்திலும் இயற்கை எரிவாயு இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள் காக்கிநாடாவுக்கு கொண்டு சோதிக்கப்பட்டபோது, அதில் 87% மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வடக்கே மியான்மரிலிருந்து தெற்கே இந்தோனேசியா வரையிலான முழுப் பகுதியிலும் இருப்பதைப் போலவே, அந்தமான் படுகையிலும் இயற்கை எரிவாயு இருப்பது பற்றிய நமது நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட தேசிய ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் ஹைட்ரோகார்பன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது.
இந்நிலையில், அந்தமானில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு நமது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.