கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும், உள்ளுர் அரசியல்வாதியின் அறிவுறுத்தல்படி காவல்துறையினரும், உள்ளூர் ரவுடிகளும் இணைந்து செயல்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரசாரத்தின்போது விஜய் மற்றும் பொதுமக்கள் மீது செருப்புகள் மற்றும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பேசியதால்தான், கலவரத்தைத் நடத்தியதாகவும்,
நோயாளிகள் இல்லாமல் காலியாகச் சென்ற ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை எனக்கூறி அப்பாவி மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற தன்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை என்றும், 30 பேரின் உடல்களை அவசர அவசரமாகப் பிரேத பரிசோதனை நடத்தி செய்த தவறை மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
கரூர் சம்பவம் அனைத்தையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல்துறையின் விசாரணை நியாயமான முறையில் இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கரூர் மாவட்டத்திற்கு சென்று சந்திப்பதை தடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா மனுவில் குறிப்பிட்டுள்ளார் இந்த மனு நீதிபதி தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் வரும் 3ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.