விளையாட்டு மைதானத்திலும் ஆப்ரேசன் சிந்தூர் நடைபெற்றாலும் அதன் விளைவு இந்தியாவுக்கான வெற்றி தான் எனக்கூறி பிரதமர் நரேந்திர மோடி ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சாம்பியன் கோப்பையைப் பெற இந்திய அணி வீரர்கள் மறுத்ததற்கான காரணம் குறித்தும் இறுதிப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல் குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 41 வருடங்களில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்த நிலையில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 146 ரன்கள் குவித்தது.
147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆசிய கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் முதல்முறையாகச் சந்தித்துக் கொண்ட இரு அணிகளும் வெற்றியைத் தன்வசப் படுத்திக் கொள்ள் போராடிய விதம் ஒருபுறம் இருந்தாலும், நடப்புத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் எண்ணம் வேறு விதம் தான்.
சமீபத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா மேற்கொண்ட முயற்சி ஆப்ரேஷன் சிந்தூர். ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகாக இந்தியா -பாகிஸ்தானுடன் விளையாடிய நிலையில், அந்த அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
மைதானத்தில் காரசார விவாதங்கள் மட்டுமல்லாமல், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடி ஒவ்வொன்றும், பாகிஸ்தானின் பெஹல்காம் தாக்குதலை மையப்படுத்தியே இருந்தன. அப்படியாகவே முதலில் இருந்தே கைக்குலுக்க மறுத்த இந்தியா, இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு கோப்பையையையும் வாங்க மறுத்து, கோப்பை இல்லாமலேயே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விதம் தற்போது உலகக் கிரிக்கெட் அரங்கில் பேசு பொருளாகியுள்ளது.
இந்திய வீரர்கள் தனிப்பட்ட முறையில் தங்களுக்கான பரிசுகளைப் பெற்றுக் கொண்டாலும், மொத்த அணியுமே தனியாக ஒரு பகுதியில் கேசுவலாக ரிலாக்ஸ் செய்துக் கொண்டிருந்த விதம் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. அதே நேரத்தில், ரன்னர் கோப்பைக்காக மேடைக்கு அழைக்கப்பட்ட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, 75,000 அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை கையில் வாங்கிவிட்டு, மேடையில் இருந்தே அதனைத் தூக்கி வீசிய விதம் அனைவரையும் முகம் சுளிக்க செய்தது.
அதற்குப் பிறகு தான் மைதானத்திற்குள் ஒரு சம்பவம் அரங்கேறியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலான தலைவர் மோஷின் நக்வி கையில் இருந்து கோப்பையை வாங்க முடியாது என அறிவித்து இந்திய அணி வீரர்கள் கெத்து காட்டினர். மாறாகச் சாம்பியன்களுக்கான போடியத்தில் குவிந்த இந்திய வீரர்கள், ஆரவாரத்துடன் சூர்யா குமாருக்காகக் காத்திருக்கவே, கையில் கேப்பையே இல்லாமல், அதனைத் தூக்கி வருவது போல ஆக்ஷன் காட்டி அணியினரின் அருகில் வந்தவுடன், அனைவரும் கோப்பையைத் தூக்குவது போலக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பேசு பொருளாகி உள்ளது. அதே போல போட்டிக்குப் பிறகானன செய்தியாளர் சந்திப்பின்போது சூர்யகுமார் யாதவ், “நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து, இதுபோன்றதை ஒருபோதும் பார்த்ததில்லை எனவும், சாம்பியன் பட்டம் வென்ற அணி, அதுவும் கடுமையாக உழைத்துப் பெற்றற பட்டத்தை, கோப்பை வாங்க மறுப்பது நம்ப முடியாது என்றாலும், ஆனால் நாங்கள் அதற்குரியவர்கள் தான் என்பதை உணர்வதாகவும் கூறினார்.
இறுதியாக “இந்தப் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலிருந்தும் தமது போட்டிக் கட்டணத்தை இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்க விரும்புகிறேன் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்திருப்பது அவர் மீதான ரசிகர்களின் நன்மதிப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
அதே போல X தளத்தில் ஆப்ரேஷன் திலக் எனும் ஹாஷ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது. வெற்றிக்குப் பிறகாக பலரும் இந்திய அணியையும், அணியின் செயல்பாடுகளையும் குறித்து பாராட்டி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில் “விளையாட்டு மைதானத்திலும் ஆப்ரேஷன் சிந்தூர்” முடிவு ஒன்றுதான் – இந்தியா வெற்றி! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்களும், பிரபலங்களும், ரசிகர்களும் இந்திய அணிக்குப் பாராட்டு மழையை பொழிந்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், விளையாட்டிலும் இது ஒரு ஆப்ரேஷன் சிந்தூர் தான்.