இலங்கையிலும், நேபாளத்திலும் ஏற்பட்டதுபோலத் தமிழகத்திலும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்ததால் அந்தப் பதிவை அவர் நீக்கி உள்ளார்.
இதுகுறித்து தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சாலையில் நடந்து சென்றாலே தடியடி, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது எனத் திமுக அரசைச் சாடியுள்ளார்.
மேலும் இலங்கையிலும், நேபாளத்திலும் ஏற்பட்டதுபோல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும் என்றும், ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாகக் காவல்துறை மாறினால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும், அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது என்றும் பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள் என்றும் ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவின் இந்தக் கடும் விமர்சனத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்ததால் சர்ச்சைக்குரிய பதிவை அவர் நீக்கி உள்ளார்.