முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, செங்கோட்டையனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
செங்கோட்டையனின் கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தாம் வெளிப்படுத்திய கருத்துக்குக் கட்சி ஜனநாயகபடி அதிமுக தலைமை தன்னிடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும் எனச் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.