பெயர்ந்து விழும் மேற்கூரைகள், கட்டடத்திற்கும் ஒழுகும் மழைநீர், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலான பில்லர்கள் எனப் பாழடைந்த பங்களாவாகக் காட்சியளிக்கிறது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கியும் அதற்கான பணிகள் நடைபெறாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சிவகங்கை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வருவாய் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் என அரசுத்துறைகளின் 36 மாவட்ட தலைமை அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமையும் வகையில், மாஸ்டர் பிளான் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது.
அலுவலகங்களோடு, அங்குப் பணியாற்றி வரும் அலுவலர்களுக்குமான குடியிருப்பும் சேர்ந்து சகல வசதிகளுடன் கட்டப்பட்டு 1988 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் கட்டடங்கள் பழுதடைந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்து செயல்படும் இந்த வளாகத்தில் மட்டும் சுமார் 500க்கும் அதிகமான அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். கட்டி முடித்து 40 ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டடத்தின் அஸ்திவாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. அவ்வப்போது மராமத்து பணிகள் நடைபெற்று வந்தாலும், கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது.
கருவூல கட்டடம், முதன்மை கல்வி அலுவலக கட்டடம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், பல இடங்களில் பில்லர்களின் பூச்சுகள் இடிந்து விழுந்திருப்பதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் மழைக்காலங்களில் தண்ணீர் சொட்டும் அவலநிலை நீடித்துக் கொண்டிருப்பதாகவும் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் 2022 ஆம் ஆண்டுத் தேதி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 82 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அதற்கான எந்தவொரு பணிகளும் தற்போதுவரை தொடங்கப்படாத நிலையே நீடிப்பதாகப் பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்துசெல்லும் முக்கியமான அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உடனடியாகப் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான பணியைத் தொடங்க வேண்டும் எனச் சிவகங்கை மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















