இடுக்கி அருகே உள்ள தனியார் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தமிழக தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவில் உள்ள தனியார் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டியில் முதலில் கூடலூரைச் சேர்ந்த மைக்கேல் என்பவர் இறங்கியுள்ளார்.
அவர் திரும்பி வராததால், அடுத்ததாக அதே ஊரைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் இறங்கியுள்ளார். இருவரும் வெளியே வராததால் கம்பத்தை சேர்ந்த ஒப்பந்ததாரான ஜெயராமன் என்பவர் கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார்.
அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வராததால் 3 பேரும் கழிவுநீர் தொட்டிக்குள் சிக்கி கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டியில் மயக்க நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டனர்.
பின்னர், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.