100 ஆண்டுகளுக்கு முன் ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி எனவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில், பிரதமர் மோடி, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், ஆர்எஸ்எஸ் நினைவு அஞ்சல் தலை மற்றும் 100 ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் என்றால் தீமையை வென்றது என்ற பொருளைக் கொண்டது எனக் கூறினார். நாட்டிற்காக ஆர்எஸ்எஸ் பல சேவைகளைச் செய்துள்ளதாகக் கூறிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் பண்டிகை விஜயதசமி எனக்கூறிய அவர், 100 ஆண்டுகளுக்கு முன்பு விஜயதசமி நாளில்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு நிறுவப்பட்டது எனத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, தேசிய நலனே முதன்மையானது என்ற கொள்கையுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், உயர்ந்த குறிக்கோளைப் பின்பற்றி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசத்தை கட்டியெழுப்பும் எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.