கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? மின்சாரம் நிறுத்தப்பட்டதா? என்பது உட்பட அங்கு என்னவெல்லாம் நடந்தது எனத் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டுள்ளதாகவும், சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தவெக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது.
இதனிடையே முதலமைச்சர் பழிவாங்க நினைத்தால் தன்னை மட்டுமே குறிவைக்க வேண்டும் எனவும் வீடியோ வெளியிட்டு விஜய் பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக நேர வாரியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தமிழக அரசு தரப்பில் தலைமைச் செயலகத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
விளக்க வீடியோ வெளியீட்டையடுத்து பேசிய தமிழக அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ், தவெகவினர் முதலாவதாக அனுமதி கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா அருகே ஆற்றுப்பாலமும், பெட்ரோல் பங்கும் இருந்ததால் விபரீதம் ஏற்படும் என அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து அதிகமானோர் வந்ததாலும், அவரை காண மக்கள் முண்டியடித்ததாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எனவும் அமுதா ஐஏஎஸ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமுதா ஐஏஎஸ், ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதாலேயே பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், காவலர்கள் தடியடி நடத்தாமல் கூட்டத்தை விலக்கியே கொடுத்தனர் என கூறிய அமுதா ஐஏஎஸ், கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்ததாக அழைப்பு வந்ததன் பேரிலேயே ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன எனவும் விளக்கமளித்தார்.