கரூர் துயர சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாகத் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகத் தவெக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்ற பவுன்ராஜையும் கைது செய்தனர்.
இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு தனிப்படை சென்னை பகுதியிலும், மற்றொரு படை ஏற்காடு மலை கிராமத்திலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.