மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம், ஒரு வரலாற்றுத் தாக்கம்! தேசத்தையும் சுயஒழுக்கத்தையும் இரு கண்களாகக் கொண்டு, மக்கள் பணியை மகேசன் ஆணையாக ஏற்று உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் எனும் பேரியக்கம் இன்றுடன் தனது நூறாண்டுகளை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் மீது விழுந்த அனைத்து விமர்சனங்களையும் தகர்த்து, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தன்னலமற்ற தலைவர்களை உலகிற்குப் பரிசளித்து, இன்று நூற்றாண்டு விழா காணும் ஆர்எஸ்எஸ்-இன் வலுவான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என கூறியுள்ளார்.
சுயநலமற்ற ஒழுக்கத்தின் பிம்பமாக விளங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு, நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிஷம்.
இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஒரு பேரியக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததை எனது வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்.
அரசியல் லாபத்திற்காகக் கொண்ட கொள்கைகளைப் பிறரிடம் அடகு வைக்கும் அமைப்புகளுக்கு மத்தியில், “அகண்ட பாரதம்” எனும் ஒற்றைச் சொல்லைத் தங்களின் உயிர் மூச்சாகக் கொண்டு ஆண்டாண்டு காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து சிறக்கட்டும்!
ஆர்எஸ்எஸ்-இன் மக்கள் பணி தொய்வின்றி தொடரட்டும் என நயினார் நாகேந்தரன் தெரிவித்துள்ளார்.