விஜயதசமியை ஒட்டி அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நன்மை மற்றும் உண்மையின் வெற்றியை விஜயதசமி குறிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, தைரியம், ஞானம் மற்றும் பக்தியின் பாதையில் இந்த மங்களகரமான சந்தர்ப்பம், அனைவரையும் தொடர ஊக்குவிக்கட்டும் எனவும் குறிப்பிட்டு விஜயதசமி வாழ்த்து குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட பதிவில், நீதியின் வெற்றியை கொண்டாடும் மாபெரும் விழா விஜயதசமி என்றும், அனைவரின் நல்வாழ்விற்காக ஸ்ரீ ராமரைப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், விஜயதசமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உண்மை, நீதி, நன்மை எப்போதும் வெல்லும் என்பதை இந்தப் பண்டிகை நமக்கு நினைவூட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட பதிவில், அதர்மம் செய்து வந்த மகிசாசூரனை வீழ்த்தி, அன்னை துர்க்கை நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டிய இந்த நன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்பார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
தீய எண்ணங்களுக்கு இரையாகாமல், கல்வி, செல்வம், வீரம் மற்றும் வளமுடன் வாழ எல்லாம் வல்ல தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.