தமிழகத்தில் பட்டியலினத்தவர்களை பாதுகாப்பதிலும், வழி நடத்துவதிலும் மோசமான நிலை காணப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்த காதிப் பொருட்களை பார்வையிட்டார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதனை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களிடையே பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாத்மா காந்தி நமக்கு நிறைய வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார். காந்தி குறித்து கற்பிக்க மறந்ததால் நாட்டில் 30 சதவிகித மக்கள் மிகவும் ஏழ்மையாகவே உள்ளனர் எனவும் கூறினார்.
மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு நாம் சுதேசியை மறந்து விட்டோம் என்றும், காந்தியத்தை பின்பற்றி இருந்தால் நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் பொருளாதார தன்னிறைவை அடைந்திருப்போம் எனவும் குறிப்பிட்டார்.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் உள்நாட்டு தயாரிப்புகளாக இருக்க வேண்டும் எனக் கூறிய ஆளுநர், உள்நாட்டு உற்பத்தி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். இதுவே, நாம் மகாத்மா காந்திக்கு செலுத்தும் மரியாதைக்கு சமமானது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.