ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரததேசத்தில் RSS 100 வருடமாக தேசப்பணியை செய்து வருகிறது. நாட்டில் பேரிடர் நிகழ்வு எங்கு நடந்தாலும் அங்கு முதலில் ஓடோடி சேவை செய்யும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தன்னலமற்ற சேவை பணியை ஆற்றி வரும் ஆர் எஸ் எஸ் இந்த வருடம் நூற்றாண்டு விழா கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் ஆரம்பித்த தினமான விஜயதசமி அன்று சென்னை ஐயப்பன் தாங்கலில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற காவல்துறை அங்கு இருந்தவர்களை கைது செய்துள்ளது. இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சிறப்பு சந்திப்பு ஏற்பாடு நடைபெறும் போதே தடுத்துள்ளது காவல்துறை என அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி சந்திப்பில், இயக்க நூற்றாண்டை முன்னிட்டு இன்று இந்த சிறப்பு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர்களை கைது செய்துள்ளது.
தமிழகத்தில் ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் திமுக அரசு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியின் சாதாரண ஒரு சந்திப்பு நிகழ்வையே பொறுத்துக் கொள்ள முடியாத சர்வாதிகார நிலை எடுத்து செயல்படுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களில் ஆர்எஸ்எஸ் பொது நிகழ்விற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது பெரிய நிகழ்ச்சியாக இது இல்லாமல், சிறிய அளவிலான எண்ணிக்கையில் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது ஆர்எஸ்எஸ். இதற்கே நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள தேச பக்தர்கள் அனைவரும் திமுகவின் பாரபட்சமான அடக்குமுறையைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழக அரசு ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.