பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் களம் போர்க் களமாக மாறியிருக்கிறது… மக்கள் போராடுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பாகிஸ்தான் ராணுவம், அடக்குமுறையை கையாண்டுள்ளது. போராட்டத்திற்கான காரணம்.. அதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட, 12 சட்டமன்ற தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் உள்ளிட்ட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 12 அப்பாவி மக்கள் இரையாக்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள், அரசு எவ்வளவு ஒடுக்குமுறையை கையாண்டாலும், நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து விலகமாட்டோம் என்றும் முழங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வளர்ச்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் அரசு, துரும்பைக் கூடக் கிள்ளிபோடவில்லை என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் கையாண்டுவரும் அடக்குமுறை சம்பவங்கள் ஷெபாஸ் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியை மேலும் தூண்டியுள்ளது.
மக்கள் விரோத போக்குடன் செயல்படும் பாகிஸ்தான் அரசையும், ராணுவத்தையும் அவாமி ஆக்ஷ்ன் கமிட்டி கடுமையாக விமர்சித்துள்ளது. காஷ்மீர் சுதந்திரமாக இருப்பதாகக் கூறும் ஆட்சியாளர்கள், சுரண்டலையும், அடக்குமுறைகளையுமே தடையின்றி வழங்கி வருவதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மின் கட்டண உயர்வு, உணவுப் பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம், தற்போது பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் ஒரு முழுமையான இயக்கமாக மாறியுள்ளது.
ஆனால் இதற்கு நியாயமான தீர்வு காண முடியாமல் தவிக்கும் பாகிஸ்தான் அரசோ, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் தயாராக நிறுத்திவைத்துள்ளது. அண்மையில் கைபர் பக்துன்கவா பகுதியில் சொந்த நாட்டு மக்கள் மீதே பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது ஷெபாஸ் ஷெரீப் அரசுக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.