ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, வரலாற்றில் பதிய வேண்டிய ஒன்று, என இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை பாகிஸ்தான் அதிகரிக்கும் நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிக இழப்பை சந்தித்தது பாகிஸ்தான்தான் எனக் கூறினார்.
இதுகுறித்து மேலும் விளக்கமளித்த ஏ.பி.சிங், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் உட்பட 12 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதில் அமெரிக்காவின் F-16 மற்றும் சீனாவின் J-17 ரக போர் விமானங்களும் அடங்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.
பாகிஸ்தானின் விமான தளங்களில்தான் அதிக தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெளிவுபடுத்திய அவர், 4 இடங்களில் ரேடார்களும், 2 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்களும் மற்றும் 2 இடங்களில் ஓடுபாதைகளும் சேதமடைந்ததாக விளக்கமளித்தார்.
சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் உட்கட்டமைப்புகளை அதிகரித்து வரும் நிலையில், விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கின் இந்தத் தகவல்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.