அமெரிக்காவின் பாணியில், புலம் பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் புதிய கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இது பிரிட்டனில் வாழ்விடம் தேடி அகதிகளாகத் தஞ்சமடைவோருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினரை வெளியேற்றவும், அமெரிக்கர்களை முன்னிலைபடுத்தவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த கட்டுப்பாடுகள், புலம் பெயர்ந்தவர்களை கடுமையாகப் பாதித்தது. தற்போது அதே பாணியைப் பிரிட்டனும் கையில் எடுத்திருக்கிறது. குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கியுள்ள பிரிட்டன், பிரான்சிலிருந்து படகுகளில் சட்டவிரோதமாகக் குடியேறும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
புலம் பெயர்ந்தவர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையைப் பெறுவதற்கான தகுதி காலம் இதுவரை 5 ஆண்டுகளாக இருந்த நிலையல், தற்போது 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, பிரிட்டனில் 5 ஆண்டுகள் வாழ்ந்தால் நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதோடு, தங்களது குடும்பத்தினரையும் அழைத்து வரும் உரிமையும் வழங்கப்படும்.
இந்த நடைமுறைக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ள பிரிட்டன், அதற்கான விண்ணப்பத்தையும் நிறுத்திவிட்டது. 10 ஆண்டுகளுக்குப் பின் நிரந்தர குடியுரிமை பெறுபவர்கள், குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும், ஆங்கிலம் சரளமாகப் பேச வேண்டும், வழக்குகள் இருக்கக் கூடாது, பிரிட்டனுக்கான அவர்களது பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்படும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் அகதிகளாகத் தஞ்சமடைபவர்கள் அமெரிக்கா பொன்று நாடு கடத்தப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியின்போது, கட்டுப்பாடற்ற குடியேற்றங்கள் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டிய பிரிட்டன் அரசு, குடியேற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டது.
மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தபின்னர் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருக்க முன்பு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் கால அவகாசம் தற்போது 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான விசா விதிமுறைகள் இல்லாவிட்டால், பிரிட்டன் அந்நியர்களின் தீவாக மாறிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும், கல்வி, வேலை, குடும்பம் எனக் குடியேற்றம் தொடர்பான எல்லா அம்சங்களிலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால்தான் அரசின் கையில் கூடுதல் அதிகாரம் இருக்கும் என்றும் பிரிட்டன் அரசு நம்புகிறது.
இந்நிலையில், புதிய குடியேற்ற விதிகள், இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்திருக்கிறது.