ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பயன்படுத்திய அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 போர் விமானங்கள் உள்பட 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏபி சிங் ரகசியத்தை உடைத்துள்ளார். பாகிஸ்தான் தோல்வியையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதுதொடர்பான செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் துணிச்சலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்க்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது உலகமே அறிந்த விஷயம். போர் முனையில் இந்தியாவிடம் யுத்தத்தை நிறுத்துமாறு மண்டியிட்ட பாகிஸ்தான், ஏதோ இந்தியாவுக்கு பதிலடியெல்லாம் கொடுத்தது போன்று அவ்வப்போது அப்பட்டமாகப் பொய்யுரைத்து வருகிறது.
அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் கூட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவ்வாறே சைகை செய்தனர். ஆனால், இந்தியாவோ ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் வெற்றிக் கொடி நாட்டியதைப் போன்றே, மூன்று போட்டிகளில் பாகிஸ்தானை படுக்க வைத்துப் பாடம் புகட்டியது. அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஹின்டன் விமானப்படை தளத்தில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் அமர்பிரித் சிங். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இந்தியா பந்தாடிய விதத்தை விவரித்த அவர், இது பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என்று கூறினார். போர் முனையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகப் புதிய தகவல்களையும் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.
குறிப்பாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய F-16 ரக போர் விமானங்கள், சீனா வழங்கிய JF -17 ரக போர் விமானங்கள் ஆப்ரேஷன் சிந்தூரின்போது அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். அதுமட்டுமின்றி கண்காணிப்பு விமானம் ஒன்று, பராமரிப்புக்காகத் தரையில் நிறுத்தி வைக்கப்பட்ட 4 முதல் 5 போர் விமானங்களும்வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
போர் முனையில், நான்கு இடங்களில் உள்ள ரேடார்கள், இரண்டு இடங்களில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், இரண்டு ஓடுபாதைகள், மூன்று ஹேங்கர்கள், தரையில் இருந்து ஏவுகணையை அனுப்பும் தளம் உள்ளிட்டவையும் தாக்குதலில் இரையானதாக அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 300 கிலோ மீட்டர் ஊடுருவிச் சென்று பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்தியது சிறப்பான தருணம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு இது உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளப்பட்டார்கள் என்றும் விவரித்தார். இந்திய விமானங்களை அழித்ததாகப் பாகிஸ்தான் கூறுவது புனையப்பட்ட கதை என்றும், இந்தியாவின் 15 விமானங்களை சுட்டு வீழ்த்தியாக அவர்கள் நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டும் என்றும் தெரிவித்தார்.
நம் விமானப்படை தளத்தை அழித்தது, விமானங்களை வீழ்த்தியது தொடர்பாக ஏதேனும் ஒரு படத்தை பார்த்துள்ளீர்களா? ஆனால் பாகிஸ்தானின் இழப்புகளை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளதாகவும் அவர் கூறாமல் இல்லை. சில நாள்களுக்கு முன், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றியபோது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஏழு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியிருந்ததார்.
பாகிஸ்தானின் கூற்றுக்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்பது தனிக்கதை. எனினும் அவரது கூற்றை மறுக்கும் விதமாக ஏர் மார்ஷலின் பதில் அமைந்திருக்கிறது.
















