நேபாளம், வங்கதேசத்தைத் தொடர்ந்து, வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலும் GenZ எனும் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பேர் பலியான நிலையில், போராட்டம் ஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.
வன்முறை…தீ வைப்பு.. .எனப் பதற்றமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோ. நேபாளம், வங்கதேசத்தில் அரசாங்கத்தை முடக்கிப்போட்ட Gen Z எனப்படும் இளம் தலைமுறையினரின் போராட்டம், தற்போது மொராக்கோவை ஆட்டம் காணச் செய்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய பொது நிறுவனங்களுக்குப் போதுமான நிதி வழங்காமல் அரசு காட்டிவரும் அலட்சியமே Gen Z போராட்டத்திற்கு முழுமுதற் காரணம்.
2030 ஆண்டு மொராக்கோவில் நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிக்குப் பல கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், பல பள்ளிகள், மருத்துவமனைகள் நிதி பற்றாக்குறையால் திண்டாடி வருகின்றன.
அதுமட்டுமின்றி அரசு நிறுவனங்களில் தலைவிரித்தாடும் முறைகேடுகள், ஆட்சியாளர்களின் ஊழல்கள், இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. அண்மையில் அகாடிரில் உள்ள பொது மருத்துவமனையில் பிரசவத்தின்போது 8 கர்ப்பிணிகள் அடுத்தடுத்து இறந்தது இளம் தலைமுறையினரிடையே ஆத்திரத்தை மூட்டியதோடு, போராட்டங்களையும் தூண்டியது.
விளையாட்டு அரங்குகள் இங்கே. மருத்துவமனைகள் எங்கே என்று முழக்கத்துடன் தொடங்கிய GenZ போராட்டம், படிப்படியாக மொராக்கோவின் பல நகரங்களுக்கும் பரவியது. சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் குதித்த இளைஞர்கள், ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதனிடையே லெகிலா நகரத்தில் நடந்த போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மொராக்கோ அரசு, போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இதை ஏற்காத போராட்டக்கார்கள், மன்னர் ஆறாம் முகமது, மக்கள் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மொராக்கோவில் மன்னருக்கு அரசை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அதிகாரம் உள்ள நிலையில், Gen Z தலைமுறையினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஒரு பக்கம் போராட்டம் பரவி வரும் நிலையில், வெகுண்டெழுந்த இளைஞர்கள் கூட்டத்தை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
















