வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் துயர சம்பவம் தொடர்பாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதளத்தில் வன்முறையை தூண்டு வகையில் அவதூறு கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
அதில் இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் புரட்சி வெடித்தது போன்று தமிழகத்திலும் புரட்சி வெடிக்க வேண்டுமென கூறி பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிரவன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விவகாரத்தில் புரட்சியை ஏற்படுத்துவது போன்று ஆதவ் அர்ஜுனா கருத்து பதிவிட்டுள்ளார் என கூறிய நீதிபதி, அதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.