அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியாவிற்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அதிக வேளாண் மற்றும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது.
தெற்கு ரஷ்யாவின் சோச்சி பகுதியில் நடைபெற்ற வால்டாய் சர்வதேச கலந்துரையாடல் கூட்டத்தில் இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த புவியியல்சார் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் எந்த பிரச்னைகளும் இருந்ததில்லை என்றும், சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் இருந்தே ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல நட்புறவு மற்றும் வர்த்தக உறவு இருந்து வந்துள்ளது எனவும் கூறினார்.
பிரதமர் மோடி தனது நாட்டைப் பற்றி முதலில் சிந்திக்கும் தொலைநோக்குடைய ஒரு புத்திசாலி தலைவர் என்றும், நம்பத்தகுந்த நண்பர் எனவும் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்த போதும், இந்தியா அதை புறக்கணித்தது என சுட்டிக்காட்டிய அவர், இதனால், இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகளுக்கு ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் சமன் செய்யப்படும் என குறிப்பிட்டார்.
மேலும், இழப்பை ஈடுகட்ட, இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதிபர் புதின் தெரிவித்தார்.