கிராமங்களுக்கான குடிநீர் வசதியில் குறையிருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், குழாய்கள் மூலம் நேரடியாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 2019ல் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் தருவதற்கான ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் 2028ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டத்தில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் சிக்கல்கள் குறித்து ஆராய கடந்த மே மாதம் 100 சிறப்புக்குழுக்களை மத்திய அரசு நியமித்தது. அதன்படி, 29 மாநிலங்களில் ஆய்வு செய்த சிறப்புக் குழுக்கள், திட்டம் தாமதம் ஆவதற்காகக் காரணங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
சமீபத்தில், பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சிறப்புக் குழுக்கள் தயாரித்த அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதில், தரம் குறைவாகப் பணி நடந்ததால் நிதியை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதையும், கூடுதல் விலைபோட்டு ரசீதுகள் போடப்பட்டிருப்பது போன்ற விஷயங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.
இதனை தொடர்ந்து, சிறிய அளவில் கூடக் குறைகளோ, புகார்களோ இருக்குமேயானால், ஒப்பந்ததாரர்களுக்கு தர வேண்டிய நிலுவை நிதியை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திட்டப்பணிகளை திரும்பத் திரும்ப ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உரிய காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.