. தலிபான் தலைவர்களுக்குப் பயணத்தடை இருக்கும் நிலையில், இந்தியா வருவதற்கு ஐநா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது. இதனால், முதல் முறையாகத் தலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு அடுத்த வாரம் வர உள்ளார். அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாகவே வலிமையான நல்லுறவு இருந்து வந்துள்ளது. 1996 மற்றும் 2001 ஆண்டுகளுக்கு இடையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, இந்தியா வடக்கு கூட்டணியை ஆதரித்தது. 2001-ல் அமெரிக்கா தலிபான்கள் ஆட்சியைத் தூக்கியெறிந்த நிலையிலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பெருமளவு உதவியது. இருபது ஆண்டுகளில் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்புக்கும் அதிகமான உதவி திட்டங்களை வழங்கியது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தலிபான்கள் கைக்கு மீண்டும் ஆப்கன் ஆட்சி வந்தது. அதன் பிறகு இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு காலத்தில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்பட்ட தலிபான்கள், ஆட்சிக்கு வந்த பிறகு 2021 ஆகஸ்ட் முதல் 2024 பிப்ரவரி மாதம் வரை சுமார் 80 நாடுகளுடன் 1,500 ராஜதந்திர சந்திப்புகளை மேற்கொண்டனர்.
இதில் 215 சந்திப்புகளுடன் சீனா முதலிடத்திலும், 194 சந்திப்புகளுடன் துருக்கி இரண்டாவது இடத்திலும், 118 சந்திப்புகளுடன் பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதற்கிடையே, இந்திய அரசும் தலிபான் அரசும் இருநாடுகளுக்கான உறவுகளை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கியமான பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-ஈரான் (PAI) பிரிவில் இணைச் செயலாளராகப் பணிபுரிந்த ஜே.பி.சிங், கடந்த ஆண்டு இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகியையும், பாதுகாப்பு அமைச்சரும் முல்லா உமரின் மகனுமான முகமது யாகூப் முஜாஹித்தையும் சந்திந்து இருதரப்பு உறவுகள் மேம்படுவதற்கான முன்னேற்பாடுகளை ஜே.பி.சிங் செய்தார். கடந்த ஜனவரியில், துபாயில் நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தலிபானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒரு நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. என்றாலும் 1947 முதல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் அந்த எல்லையில் பயங்கரவாதத்தை நடத்தி வருகிறது.
ஆப்கானிஸ்தானுடனான வர்த்தகத்துக்கு ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம்தான் இந்தியாவுக்கு ஒரே வழியாக உள்ளது. எனவே சபாஹர் துறைமுகம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை செய்ததாக இருநாடுகளும் அறிவித்தன. கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குத் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மூத்த இந்திய தூதர் ஆனந்த் பிரகாஷ் காபூலுக்குச் சென்று முட்டாகியுடன் சந்தித்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேசினார்.
தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த தலிபான் அரசுக்கு நன்றி தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களைத் தலிபான்கள் நடத்துவதாக தவறான மற்றும் ஆதாரமற்ற அறிக்கைகள் வெளியிட்டு இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை முட்டாகி உறுதியாக நிராகரித்ததையும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ உதவியை நாடும் ஆப்கான் மக்களுக்கு கூடுதல் விசாக்களை வழங்குமாறு ஜெய்சங்கரிடம் கேட்டுக் கொண்ட முட்டாகி, இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தின் மேம்பாடு குறித்தும் விவாதித்ததாக தலிபான்களின் தகவல் தொடர்பு இயக்குநர் ஹபீஸ் ஜியா அகமது உறுதி செய்திருந்தார்.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் 50,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான கோதுமை, 300 டன் மருந்துகள், 27 டன் இயற்கை பேரிடர் நிவாரண உதவி, 40,000 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள், 100 மில்லியன் போலியோ சொட்டு மருந்துகள், 1.5 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி, போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கான 11,000 யூனிட் சுகாதார கருவிகள், 500 யூனிட்களுக்கும் மேல் குளிர்கால ஆடைகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்குத் தேவையான 1.2 டன் பென்சில், பேனா, நோட்டுகள் போன்ற பொருட்களை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில் வரும் 9ஆம் தேதி தலிபான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி, இந்தியா வருவது உறுதியாகியுள்ளது அனைத்து முன்னணி தலிபான் தலைவர்களுக்கும் எதிராக பயணத்தடையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விலக்கு பெற வேண்டும் என்பது நியதியாக உள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடைகள் குழு, முட்டாகியின் இந்திய பயணத்துக்கு “தற்காலிக விலக்கு” அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.